இலக்கணம்26/9/15


அறிவியல் தொழில்நுட்பப் பள்ளி
முன்னோட்டத் தேர்வு -
உயர் தமிழ்
தாள் 2
"அ" பிரிவு 
  1. சொற்புணர்ச்சி                                 (10 மதிப்பெண்கள்)             

     பின்வரும் சொற்களைப் பிரித்து எழுதுக.             
     
1. மாவடு

2. ஆய்வரங்கம்

3. வழுவன்று

4. மகிழ்வெய்தி

5. ஈரடுக்கு

  2. வாக்கியம் அமைத்தல்                     (15 மதிப்பெண்கள்)   

     பின்வரும் சொற்களை அவற்றின் பொருள் விளங்கும் வகையில்   
     வாக்கியத்தில் அமைத்து எழுதுக.  
                                            
    6. தற்காலிகமான

    7. இலக்காக
    
    8. எண்ணிக்கையிலடங்கா
      
    9. பிறழாத  

    10.அவலங்களை
"ஆ" பிரிவு

3. முன்னுணர்வுக் கருத்தறிதல்                        ( 20 மதிப்பெண்கள்)

கீழ்க்காணும் பகுதியில் கோடிட்ட இடங்களை மிகப் பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக. ­­­­­

     பேச்சாற்றல் மனிதனுக்கு மட்டுமே தரப்பட்டுள்ள மாபெரும் வரமாகும். ஆனால் அதை 11.___________________ பயன்படுத்துவதால் பல பிரச்சனைகள் தோன்றி விடுகின்றன. பேசும் வசதியைக் கவனமின்றி பயன்படுத்துவது பெரும்பாலும் குறை கூறும் பழக்கமாக வெளிப்படுகிறது. இத்தீய 12.___________________ மனிதர்களிடையே நிலவும் நல்லுறவைச் சிதைத்து அவர்களை எதிரிகளாக 13. ___________________ முதலிடம் பெற்றுள்ளது. கழுகினால் பிணவாடையைத்தான் உணர முடியும் என்பது போல் சிலருக்குக் குறை கண்டுபிடிக்க 14. ___________________ தெரியும். அவர்கள் அதை சுட்டிக்காட்டும் விதமும் நாகரிகமற்றதாக இருக்கும். இதை மனிதர்கள் உணரும் போது அத்தகைய மக்களை வெறுக்கவும் செய்வார்கள்.
      குறை கூறுவதைவிடப் பாராட்டுவது ஒரு நல்ல உத்தியாகும். குறை கூறினால் உயிர் நண்பர்களும் எதிரிகளாகி விடுகின்றனர். பாராட்டினாலோ எதிரிகள் தமது               15. ___________________ கைவிடுகின்றனர். அறிமுகமற்றவர்கள் ண்பர்களாகிவிடுகின்றனர். ஒருவரைப் பாராட்டுவதற்கு எந்த அம்சமும் இல்லாது போய், 16. ___________________ கண்டிப்பதற்கான விசயம் மட்டுமே கிடைக்கும் போது குறை கூறுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற அந்தச் சூழலிலும்,                   17. ___________________ மௌனமாக இருந்து விடுவது சிறந்த பண்பாகும்.
      மக்கள் ஏன் பிறரிடம் குறை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்? அவர்கள் 18. ___________________ தங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு, அதை நிலை நாட்ட விரும்பலாம். நம்மீது கூறப்படும் 19. ___________________ உண்மையானால் நாம் நமது குணம் அல்லது பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். காரணமின்றி  ஒருவர் நம்மைக் குறை கூறினால் அது ஒரு வகையில் பாராட்டிற்கு 20. ___________________. நம்மைப் பற்றிக் குறை கூறுவோர் ஒருவகையில் நமக்கு உதவுகிறார் என்றே கருதலாம்.


" " பிரிவு
4. கருத்தறிதல் 1                                        (25 மதிப்பெண்கள்)
பின்வரும் கட்டுரைப் பகுதியைக் கருத்தூன்றிப் படித்து, அதனடியிற் காணும்  வினாக்களுக்கு உனது சொந்த நடையில் விடை எழுதுக.

        இன்றைய சமூக வாழ்க்கை, வேகப்போக்குடையதாக அமைந்துவிட்டது. இதன் விளைவாகப் புதுப்புது பிரச்சனைகள் சமூக வாழ்விலும், தனிமனிதனின் வாழ்விலும் தலைதூக்குகின்றன. சில பிரச்சனைகள் எளிதாகவும், பல பிரச்சனைகள் சமாளிக்க முடியாத அளவிலும் அமைந்துவிடுகின்றன. இதனால் மனிதனுக்கு ஒருவிதமான மனவுளைச்சலும், அதன் முதிர்வால் மன அழுத்தமும் ஏற்படுகின்றன. இதன் தாக்கம் கூடுவதும் குறைவதும் அவரவர் ஆளுமைத்திறனைப் பொருத்ததாக அமைகின்றன. மன அழுத்த நோய்க்கும் இந்த நிலையே காரணமாகிவிடுகின்றன.     
         ஆற்றொழுக்குப் போல் ஒழுங்காக இயங்கி வரும் அன்றாட வாழ்வில், எதிர்பாரா நிலையில் திடீரென முளைக்கும் புதுப்புதுப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவியலாத நிலை ஏற்படின் அது ஒருவித மன நெருக்கடியைத்தான் உருவாக்கிவிடுகிறது. அதுவே வேகமாக வளர்ந்து மன பாதிப்புகளையும் உண்டாக்கி இறுதியில் மனநல மருந்துவரைக் காண வேண்டிய நிலைக்கு நம்மைத் தள்ளி விடுகிறது. இன்றைய  வாழ்க்கையின் பாதிப்புகளே இவை என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.
         முன்பு இத்தகைய மனஅழுத்த நோய்க்கு ஆட்படுபவர்கள் மிகவும் சிலரே. அவர்களும் குறிப்பிட்ட ஒருசில துறையைச் சார்ந்தவர்களாகவே இருப்பர். ஆய்வுக் கூட சோதனையில் கடுமையாக முயலும் போது எதிர்பாராமல் திடிரென உருவெடுக்கும் புதிர்களுக்கு விடை காண இயலாது திணறும் ஆய்வாளர்,தொழில்துறையில் ஏற்படும் கடுமையான போட்டிகளை இழப்பின்றிச் சமாளிக்கப் போராடும் மேலாளர் அல்லது முதலாளி, உயிருக்குப் போராடும் நோயாளின் நிலை கண்டு வருந்தும் இரத்தபந்தங்கள், போட்டியில் எப்படியும் வெற்றிபெற்றே ஆக வேண்டுமெனத் துடிக்கும் போட்டியாளர் போன்றோரே மனநெருக்கடி எனும் மனஅழுத்த நோக்கு ஆட்படுவர்.  
         மனவழுத்தம் ஏற்படுவதற்கு அறிவியல் அடிப்படையில் அமைந்த காரணம் என்னவென்று பார்த்தால், தன்னிடம் வேண்டும் தேவைகளுக்கு உடம்பு மேற்கொள்ளும் ஒருவகை எதிர்ச்செயல் என உளவியல் வல்லுநர்கள் விளக்கமளிக்கின்றனர். சான்றாக, இரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் போது கணையம் இன்சுலின் நீரை அதிக அளவில் சுரப்பதைக் கூறலாம். இருப்பினும் இதற்கு மாறாகவும் உடல் செயற்பட்டு, அதனைத் தடுக்க அல்லது மாற்ற இயலா நிலை ஏற்படுகிறது. இதனால் ஒருவகை மன நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு உடலியற்போக்கு மட்டுமல்லாது மனநிலை பாதிப்பும் காரணமாய் அமைகிறது.
         இத்தகைய உணர்வினின்று  விடுபட உடனடியாக உரிய வழி தேடவில்லை எனில், இம்மன அழுத்தம் கடுமையான மன இருக்கத்திற்கு வழிவகுத்துவிடும். உளவியல் அடிப்படையில், நம்முள் மனவழுத்தம் கருக்கொள்ளும் போது எழும் எச்சரிக்கை உணர்வின் தன்மையை உணர்ந்து, உடனடியாய் நம்மை எதிர்நோக்கும் பிரச்சனைகளின் தன்மையைக் குறைக்க வேண்டும். அல்லது மனவுணர்வை இலேசாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே நமது மன இருக்கம் குறைய வாய்ப்பு உண்டாகும்.
         
வினாக்கள்.
21.  இதன் தாக்கம் கூடுவதும் குறைவதும் அவரவர் ஆளுமைத்திறனைப் 
      பொருத்ததாக அமைகின்றன.” இத்தொடரில் இதன் தாக்கம் என்ற
     சொற்றொடர் உணர்த்தும் கருத்து என்ன?  (6 மதிப்பெண்கள்)
22.  மனநல மருத்துவரைக் காண வேண்டிய காரணம் என்ன?       
      ( 5  மதிப்பெண்கள்)
23. மனவழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாக கட்டுரை ஆசிரியர் யாரைக்
     குறிப்பிடுகிறார்? ( 4 மதிப்பெண்கள்)
24. மன அழுத்தம் உண்டாகக் காரணம் என்ன( 5 மதிப்பெண்கள்)
25. மன இருக்கத்தைக் குறைக்கும் வழிகளைக் கூறுக.( 5 மதிப்பெண்கள்)
5. பொருள் கூறுதல்                               (10 மதிப்பெண்கள்)
   கீழ்க்காணும் சொற்கள் மேற்கண்ட பகுதியில் இடம்பெற்றுள்ளன.
   அச்சொற்களின்  பொருளை எழுதுக.
26. தலைதூக்குகின்றன
27. தீர்வு
28. ஆட்படுபவர்கள்
29. இரத்தபந்தங்கள்
30. உரிய
6. கருத்தறிதல் 2                            ( 10 மதிப்பெண்கள்)
பின்வரும் கட்டுரைப் பகுதியைக் கருத்தூன்றிப் படித்து, அதனடியிற் காணும் வினாக்களுக்கு உனது சொந்த நடையில் விடை எழுதுக.
1.      நம் வாழ்க்கை மூன்று கூறுகளைக் கொண்டு அமையும். ஒன்று, உலகத்தால்-சுற்றுப்புறத்தால் அமையும். மற்றொன்று உடம்பால் அமையும். இன்னொன்று மனத்தால் அமையும். பெரும்பாலோர் உலகத்தைத் திருத்துவதில் முனைகிறார்கள்.உடம்பைத் திருத்துவதில் சிறு முயற்சியே செய்கிறார்கள். இது தலைகீழான நிலை. இந்த உலகம் மிகப் பெரிய நிலை ஆகவேதான் ஒரு மனிதன் நினைத்தபடி உலகத்தைச் சுலபத்தில் திருத்திவிட முடியாது. எவ்வளவோ உத்தமர்கள் உலகத்தில் தோன்றி அறிவுரைகள் கூறிவிட்டனர். அவற்றையெல்லாம் விழுங்கி இந்த உலகம் ப்பம் விட்டுக்கொண்டு உள்ளது. உலகத்தைத் திருத்த முயல்வது பெரிய வேலை. அதைவிட்டுவிட்டு உடம்பைத் திருத்துவதில் ஈடுபாடு காட்டலாம். உடம்பு நம்முடைய கையில் உள்ளது. உடம்பைக் காக்கும் கடமையில் ஒருவகை நம்பி­க்கையோடு ஈடுபட்டால் அதில் வெற்றியடையலாம்.
2.        அடுத்ததாக உள்ளது மனம். அதைச் செம்மைப் படுத்திக் கொள்ள முயல்வது மிகமிகக் குறைவு. விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இந்த முயற்சியில் வெற்றி பெறுகிறார்கள். உண்மையில் பார்த்தால் இந்தத் துறையில் தான் அனைவரும் முயல வேண்டும். ஏன் என்றால் இங்குதான் முயற்சிக்கு ஏற்ற கூலி உண்டு. மனத்தைப் பொறுத்தவரையில் பரந்த உலகில் தாக்குதல் குறைவு. இயற்கையின் தாக்குதலும் மிகக் குறைவு. மனத்தின் தாக்குதல் ஓரளவு உண்டு.
3.        மனம்போல வாழ்வு. மனத்தினால் எண்ணித்தானே இந்த வாழ்வு வந்தது. மனம் இங்கேயே நரகத்தை உண்டுபண்ணிக் கொள்ள முடியும். சொர்க்கத்தைப் படைத்துக் கொள்ளவும் முடியும். வாழ்வே மனத்தின் தன்மையை ஒட்டியதுதான். இன்பமும் துன்பமும், மனநிலைக்கு ஏற்றவாறு அமையும். இவ்வளவுக்கெல்லாம் மனம் அடிப்படையாக இருந்தும் மனத்தைப் பண்படுத்த பலர் முயல்வது இல்லை. அதனால்தான் உத்தமர்களின் அறிவுரைகளும் பலருக்குப் பயன்படுவதில்லை.
4.        மனம் பண்படுவதற்கு, பண்பட்டவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிக்க வேண்டும். அவர்கள் சொன்ன சொற்களை அல்லது எழுதிவைத்த எழுத்துக்களைத் திரும்ப திரும்ப படித்துவர வேண்டும். உலகத்தையும் உடம்பையும் திருத்துவதைவிட இவ்வாறு மனத்தைப் பண்படுத்தினால் நம் வாழ்க்கை உலகத்தில் சிறப்புடையதாக அமையும் என்பதில் ஐயமில்லை அல்லவா? இறைவனின் வித்தைகளுள் மனிதனின் உடல்தான் வியக்கத்தக்கது. மனித மூளையின் சக்திக்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமில்லை. ஆகையால்தான் பெற்ற உடம்பை நீண்ட நாள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அதை நாம் போற்றிக் காக்க வேண்டும்.
வினாக்கள்
31. எக்கருத்தை கட்டுரை ஆசிரியர்  தலைகீழான நிலை என்று கூறுகிறார்? 
32.  எதில் ஒருவர் வெற்றியடைய முடியம்?

"ஈ" பிரிவு
  7. சுருக்கி வரைதல்                             (20 மதிப்பெண்கள்)
  33. கருத்தறிதல் 2இல், பத்தி 2,3,4 ஆகியவற்றில் தரப்பட்டுள்ள
        கருத்துக்களைப் பொருள் பிறழாது உன் சொந்த நடையில் 50 சொற்களில்

        சுருக்கி எழுதுக.                            

No comments:

Post a Comment